புலம்பெயர் உறவுகளின் உதவிகள் - வரமா சாபமா?
பேராசிரியர் செல்வம் கண்ணதாசன்
ஒட்டுண்ணியியல்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் செல்வம் கண்ணதாசன்
ஒட்டுண்ணியியல்துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Page 87 of 91
தனது சேவைமிகு முப்பதாவது ஆண்டினைக் கோலாகலமாகக் கொண்டாடும் யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் இறும்பூதெய்துகிறேன்.
சங்க உறுப்பினர்களது அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலையுடனான வாஞ்சை போற்றுதற்குரியது. தங்களால் நற்பணிகள் பல நிறைவேறிய காலப்பகுயில் தங்களுடன் பயணிக்கக் கிடைத்தமையைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
அந்தவகையிலே, பெரும்பாலானோர் பேசத் தயங்குகின்ற, ஒரு முக்கிய விடயத்தை இச்சந்தர்ப்பத்திலே உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன். அதாவது தாயகத்திற்குக் கிடைக்கின்ற புலம்பெயர் உறவுகளின் உதவிகள் பற்றிய நடுநிலையான எனது அனுபவம்.
துரதிஷ்டவசமான கொடிய யுத்தம் காரணமாக எமது இனப்பரம்பலில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டது. பெரும்பாலானோர் வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்குமே இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். மூளைசாலிகள் வெளியேறினர். சமுதாய அக்கறையுள்ளோர் ஒன்றில் யுத்தத்தில் இறந்துபோயினர் அல்லது இடம்பெயரவேண்டிய சூழலிற்குள் தள்ளப்பட்டனர். எமது கூட்டுக்குடும்பக் கட்டமைப்புகள் சிதைந்துபோயின.
கோட்பாட்டின்படி கொடிய யுத்தத்தின் பின்னராக ஒரு சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்கள் நிகழும் என்றிருக்கின்றதோ அத்தனையும் அச்சுப்பிசகாமல் எமது சமுதாயத்தில் நிகழ்ந்தேறின. சரியான தலைமைத்துவமின்மை; உயிர்வாழ்ந்தால் போதும் என்கின்ற மனோநிலை; முற்றுமுழுதான சுயநலம்; சமுதாய அக்கறையின்மை; குறிப்பாக, சரியாக வழிநடத்தப்படாத இளைஞர்கள் மத்தியில் சமுதாயப்பிறழ்வு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒருகாலத்திலே, பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் கல்வியறிவிற்கும் உதாரணமாக விளங்கிய எமது சமுதாயத்தின் ஆன்மா உறங்கு நிலைக்குச் சென்றுவிட்டதோ என எண்ணத்தோன்றும் வகையிலே நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
இங்கு ஒட்டுமொத்தமாக எல்லோர் மீதும் ஆதங்கப்படவில்லை. ஒரு சில நல்லவர்கள் உள்ளதாலேயே சமுதாயத்தின் இதயம் இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறது. இப்பின்னணியிலேயே புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் தாயகத்தைத் திரும்பிப்பார்க்கத் தொடங்கின.
தமது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மட்டும் உதவிக்கொண்டிருந்தவர்கள், தமது பாடசாலையை, தமது கிராமத்தை, தமது இனத்தை என தமது அக்கறையின் வீச்சைப் பெருப்பித்துக்கொண்டுபோயினர்.
தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் கஷ்டப்பட்டாலும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கண்ணுற்று, எம்மினமும் தரமாக வாழவேண்டும் என்ற அக்கறையாலும், தாம் பாடசாலைகளில் கற்ற காலங்களில் தமக்குக் கிடைக்காத வசதிவாய்ப்புக்கள் தாயகத்திலுள்ள மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற அக்கறையிலும் உணர்வுபூர்வமாக உதவ முன்வருகின்றனர்.
தனிப்பட்ட ரீதியிலும் குடும்பமாகவும் அறக்கட்டளைகளாகவும் பாடசாலை அல்லது பல்கலைக் கழக பழைய மாணவர் சங்கங்களாகவும் உதவ முன்வருகின்றனர். “வறுமை கல்விக்குத் தடையாக இருக்கக்கூடாது” எனும் பிரதான நோக்குடன் செயற்படும் பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலையின் இதர தேவைகளையும் நிறைவேற்ற முயல்கின்றன.
தனிப்பட்டவர்களோ ஏனைய அமைப்புகளோ “சமுதாயத்தில் வறுமையை ஒழித்தல்- குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களில்” எனும் பிரதான குறிக்கோள்களுடன் செயற்படுகின்றனர். தம்மைப்போல தாயக உறவுகள் கஷ்டப்படக் கூடாது என்ற உணர்வு, யுத்தத்தில் எத்தனையோபேர் தம் இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கத் தாம் குறிப்பிட்ட காலத்தில் தாயகத்தை விட்டு வந்துவிட்டோமே என்ற ஒருவித குற்ற உணர்வு, என்னதான் வெளிநாட்டில் பணம் பதவி இருந்தாலும் சமூகப்பங்களிப்புச் செய்கின்றபோதே ஏற்படுகின்ற திருப்தி போன்ற பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர் உறவுகள் தாயக உறவுகளிற்கு உதவ முன்வருகின்றனர்.
இத்தகைய உணர்வுடன் உதவுகின்றமையை வரமாகக்கருதி நன்கு பயன்படுத்தி உயிர்வாழுதலும் அற்ப சந்தோசங்களை அனுபவித்தலும் எனும் தொலைநோக்கற்ற நிலையிலிருந்து மாறி அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதையில் முன்னேறுதல் எமது கடமையாகும்.
ஆனால், எமக்கோ எமக்குரிய சரியான தேவைகள் தெரிவதில்லை. யாருமே நீண்டகால நோக்கில் சிந்திப்பதற்குத் தயாராக இல்லை. அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்து பொதுவான இலட்சியத்தை நோக்கி நகர்த்துவதற்கான சுயநலமற்ற தலைமை இல்லாமை எமது துரதிஷ்டமே. அதேவேளை, மிக மிக அரிதாக ஒருசிலர் தமது பெருமையைப்பறைசாற்றவும், சிறிய உதவியினைச் செய்துவிட்டு படம் எடுத்து முகநூலில் பதிவிடவும் செய்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் மிகப்பெரிய உதவிகளைச் செய்துவிட்டு முகந்தெரியாதவர்களாக உயர்ந்திருக்கின்றனர்.
இத்தகைய பின்னணியில், மிகக் குறைந்தளவு (எல்லோருமல்ல) தாயகத்திலிருந்து உதவிகோருவோரது பிழையான தகவல்களை நம்பி ஏமாந்துபோகும் புலம்பெயர் உறவுகள் எல்லோரையுமே தவறாக எண்ணி ஆதங்கத்துடன் விலகிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தாய்மை உணர்வு கொண்ட புலம்பெயர் பெண்களே அதிகம் ஏமாற்றப்படுகின்றனர்.
தொலைநோக்கற்று, சரியான தேவைகளை அறியாது (உதவி கோருபரை நம்பி அல்லது தங்களது வெளிநாட்டு அனுபவங்களை நம்பி), உடனடியாக கொடுத்தோம் முடித்தோம் என செய்யப்படும் ஒருசில உதவிகள் தாயக உறவுகளுக்கு சாபமாக அமைந்து விட்டதோ என எண்ணினால், மறுப்பதிற்கும் இல்லை.
அரசியல்வாதிகள் தங்களிலே தங்கியிருக்கின்ற நிவாரணம் பெறும் சமுதாயத்தையே தக்கவைக்க விரும்புவர். மக்கள் சொந்தக்காலில் நிற்பதையோ சுயமாக உழைத்து முன்னேறுவதையோ விரும்பார். அதேபோலவே புலம்பெயர் உறவுகளின் உதவிகளில் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு முடமான சமுதாயம் உருவாகிவிடக்கூடாது என்பது தான் எமது பேரவா.
உங்களது உதவிகள் ஆரம்ப முயற்சிக்கு உதவுவதாகவோ, பல்வேறு முயற்சிகளின் பின் போதாமலிருக்கின்ற சிறு இடைவெளியை நிரப்புவதாகவோ அமைதல் வரமாக அமையும். மாறாக நூறு வீதமும் உங்களில் தங்கியிருப்பதையோ அல்லது “நாங்கள் சும்மா இருப்போம் ஒருவரும் எங்களுக்கு உதவுகினமில்லை” என்ற மன நிலை மாற்றுவதாகவோ அமைய வேண்டும்.
சும்மா கிடைக்கின்ற எந்த பொருளுக்குமே பெரும்பாலும் மதிப்பில்ல்லை. வெளிநாட்டிலே கஷ்டப்பட்டு இடியப்பம் அவித்து வீடுவீடாக விற்றுவந்த பணத்தை இங்கு அனுப்ப, வீட்டிலிருந்தவாறே “பீட்சா” வரவழைத்தால் எப்படியிருக்கும்?
மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதனைப் பராமரிப்பதற்கான செலவுக்கு என்ன வழி? கைத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதனைப் பராமரிப்பதற்கான செலவுக்கு என்ன வழி?
மேலும், எமது வாழ்விற்கு நாமே பொறுப்பு; சொந்தக்காலிலே நிற்கவேண்டும்; உழைத்தே உயரவேண்டும்- எந்தவித குறுக்குவழியையும் நாடக்கூடாது போன்ற வாழ்வியல் விழுமியங்களற்ற இளம் சமுதாயம் உருவாகி வருகின்றதோ எனும் ஐயமும் அதற்குப் புலம்பெயர் உறவுகளின் கண்மூடித்தனமான உணர்வுபூர்வமான பண உதவிகளும் வெளிநாட்டு மோகமும் சாபமாக அமைந்துவிடுகிறதோ என மனவருத்தத்துடன் எண்ணத்தோன்றுகின்றது.
அந்தவகையிலே, சாமி வரம்கொடுப்பதுபோன்று தகுதியறிந்து சரியானவர்களுக்கு நீண்டகாலத்தில் பயன்தரவல்ல சரியான உதவிகளையே புலம்பெயர் உறவுகளும்; செய்ய முன்வரவேண்டும். அத்துடன் தாயகத்திலுள்ளோரும் அதனை வரமாகப் பயன்படுத்திக் கொண்டாலே எமது சமுதாயம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்.