யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் - கனடா: முப்பது ஆண்டுப் பயணம் (1995–2025)
கனடாவில் செயல்பட்டு வரும் யா/விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2025 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது. 1995 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இச் சங்கம், கல்வி உதவிகள், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வுகள், 400 மீட்டர் விளையாட்டு மைதானம் விரிவாக்கம், திறந்தவெளி அரங்கம், பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் பழுதுபார்ப்பு வேலைகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகைகள் மற்றும் புலமைப்பரிசில்கள், கனடாவில் வாழும் பழைய மாணவர்கள் ஒன்றிணையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள், பிள்ளைகள் பங்குபற்றக் கூடிய போட்டி நிகழ்ச்சிகள், ஆசிரியர் கௌரவிப்புகள், பொங்கல் விழாக்கள் மற்றும் சுற்றுலாக்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் மூலம், ஒவ்வொரு செயற்குழுவும் (1995 முதல் 2025 வரை) சங்க வளர்ச்சியில் தங்களது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன.
2023–2025 ஆண்டுக்கான தற்போதைய செயற்குழு, தலைவர் திரு. சுரேஸ் தர்மலிங்கம் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. உறுதியான உறுப்பினர் வலையமைப்பும், வெற்றிகரமான முயற்சிகளின் கடந்தகால வரலாறும் இச் செயற்குழுவிற்கு வழிகாட்டியாக நிற்கின்றன.
2025ஐத் தாண்டியும், இந்த சங்கம் பழைய மாணவர்களுக்கான ஒற்றுமைக் கருவியாகவும், பாடசாலைக்கு நிலையான ஆதரவாளராகவும் தொடரும் என்பதில் எப்போதும் சந்தேகமில்லை. கடந்த 30 ஆண்டுகள் - ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து, பல போராட்டங்களை வென்றும், ஒன்றுபட்ட செயல்பாடுகளின் மூலம் பல இலக்குகளை அடைந்த பயணமாகும். 1995 ஆம் ஆண்டு கடுமையான பனிப்பொழிவிலும் $5,000 வசூலித்து தொடங்கிய பயணம், 2025 ஆம் ஆண்டு வரை $120,000ஐத் தாண்டும் நிதி ஆதரவளிக்கும் வலிமையான அமைப்பாக வளர்ந்துள்ளது. இந்த நிதி, சங்கத்தின் நேரடி நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் மூலமாகவும், கல்லூரிக்கு உதவிபுரிய விரும்பும் நன்கொடையாளர்களுக்கு தேவையான பொறிமுறைகளை ஏற்படுத்தி அனுசரான வழங்குவதன் மூலமாகவும் ஒருங்கிணைக்கப்பட்டவையாகும்.
இந்தப் பயணத்தில் 2023–2025 செயற்குழுவும், அதனைத் தொடர்ந்து வரும் குழுக்களும், முன்னோடியர்களின் சாதனைகளை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படத் தயாராக உள்ளன. “நாம் பயின்ற பாடசாலைக்கான நன்றியும், அதை உயர்த்தும் கடமையும்” என்ற 1995 இல் விதைக்கப்பட்ட நோக்கம், இன்றும் சங்கத்தின் அடித்தளமாகத் திகழ்கிறது. புதிய தலைமுறையின் பங்களிப்புடன், சங்கம் பல பயனுள்ள திட்டங்களை முன்னெடுத்து தனது சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தும் என நம்புகிறோம். கடந்த 30 ஆண்டுகளின் வலிமையான அடித்தளத்தில், இச் சங்கத்தின் பயணம் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும்.
