நாம் பிறந்த பொன்னாடாம் ஈழத் திருநாட்டின் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற பழம் பெரும் கல்லூரிகளில் ஒன்றான சுழிபுரம் பகுதியில் இருக்கும் விக்ரோறியா அன்னை பல பிரமுகர்களை, தலைவர்களை, அமைச்சர்களை பெற்றெடுத்த பெருமையுடன் விளங்கும் இவ்வன்னையின் தாழ்பணிந்து வணங்கி, எம்மை பெற்று நற்குண நல்லொழுக்கத்துடன் வளர்த்து, மேற்படி கல்லூரியில் கல்வி கற்க வைத்த பெற்றோருக்கும், நன்னடத்தை மற்றும் தலைசிறந்த கல்வியை போதித்த ஆசிரிய ஆசான்களுக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு அந்நிய தேசத்தில் வாழ வழி வகுத்ததும் கல்லூரியின் வழிநடத்தலே. அவ்வண்ணமே நாம் வசிக்கும் கனடா நாட்டில் விக்ரோறியா அன்னையின் புதல்வர் பலர் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த பழைய மாணவர் சங்கமானது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி” என்ற பதத்திற்கு இணங்க வளர்ந்து நிற்கின்றது என்பதைச் சொல்வதிற் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். இத்தனை வருட காலத்திலும் நாம் எமது கல்வி தாய்க்கு செய்த சேவை அளப்பரியது. “யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வழி வந்தோரும்” என்று எமது இந்நாட்டின் பனி, குளிர், வெயில் என்ற அசாதாரண கால நிலையையும் பொருட்படுத்தாமல் உழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்து, எமது சேவையை செய்துள்ளோம். இந்த சங்க ஆரம்ப காலத்தில் இருந்து நான் அதில் ஒரு அங்கத்தவராகி, காரியதரிசியாகி, தலைவியாகி பல வருடமாக வேலை செய்துள்ளேன். ஒவ்வொருவரும் தன் சொந்த வேலையாகவும், ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் செய்து வந்துள்ளனர். இங்கு பல பொங்கல் விழாக்களையும், ஒன்று கூடல்களையும் செய்தோம். பல சுற்றுலா பயணங்களையும் மேற்கொண்டு, இங்குள்ள நமது உறவுகளை சந்தோஷப்படுத்தி அதனூடாக சேகரிக்கப்படும் பணத்தை கல்லூரிக்கு அனுப்பி வைப்பிலிட்டு, வட்டி பணத்தில் கல்லூரியின் தேவைகளின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துள்ளோம்.
சுற்றுலா பயணம் எனும் போது பழைய மாணவ குடும்பத்தினர் மட்டுமின்றி வேறு சில மாணவ மாணவர் சங்கத்தினரும் சேர்ந்து 30,000 தீவுகளை கப்பலில் சென்று சுற்றி வந்தோம்.
இது மட்டுமன்றி வசந்த கால இயற்கை காட்சியை பார்ப்பதற்காக ரயிலில் Credit Valley என்னும் இடத்திற்கும் சென்று வந்தோம்.
இத்துடன் எமது கல்லூரியின் 125 ஆவது ஆண்டு மலர், நடன ஆசிரியையினால் தயாரிக்கப்பட்ட CD ஆகியவை கிடைக்க பெற்றதும் விற்பனை செய்து பணம் வசூலித்தோம்.
கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கான Tiles பதிப்பித்தோம். Cricket விளையாட்டுக்காக பணம் அனுப்பி வைத்தோம்.
இப்படி பல விதத்திலும் எமது கல்லூரிக்கான சேவை செய்துள்ளோம். இதே வேளை என்னுடன் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைத்த அத்தனை அங்கத்தவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இச்சங்கத்தை அடுத்த சந்ததியின் கைகளுக்குக் கையளித்து, பல்லாண்டு காலம் வளர்ந்து, தொடர்ந்து சேவையை வழங்க வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
“வாழ்க விக்ரோறியா வாழ்க நிரந்தரம்”