எமது விக்ரோறியா அன்னையின் தேவையறிந்து கனடா வாழ் வாரிசுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய "கனடா பழைய மாணவர் சங்கம்" 30 ஆண்டுகள் நிறைவாவதை முன்னிட்டு நிகழ்த்தும் நிகழ்வுகளுக்கு வாழ்த்துக்களை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
பொலிவான வயதான முப்பது வருடங்களைப் பூர்த்தி செய்யும் சங்கம் இளமைப்பூரிப்புடன் தம் தாயின் தேவைகளை அறிந்து உதவுவது பெருமைக்குரியதாகும்.
கனடா பழைய மாணவர் சங்கம் கோடிக் கணக்கான இலங்கை ரூபாக்களை கல்லூரிக்காக வாரி வழங்கியதை யாவரும் அறிவார்கள். பௌதீக வள வளர்ச்சியின் உச்சமாக (Bench Mark) கல்லூரி விளையாட்டு மைதானத்தை 400m ஓடு பாதை கொண்டதாக மாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும், அயலிலுள்ளவர்களிள் காணிகளைக் கொள்வனவு செய்து, நேராகவும் மறைவாகவும் பலரின் விமர்சனங்கள் வந்தபோது “முன்வைத்த காலை பின் நோக்கி வைக்காமல்” தமது இலக்கை 2014 பங்குனி மாதம் நிறைவாக்கினர்.
நிர்வாகக்கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள மண்டபத்தை முழுமையாகப் புதுப்பித்து “சிவபாத சுந்தரனார் கேட்போர் கூடம்” உருவாக்கித் திருப்தியடைந்தனர்.
கல்விக்காகவும் இணைபாட விதான செயற்பாடுகளுக்காகவும் இவர்கள் வழங்கிவரும் ஆதரவு போற்றுதற்குரியது. காலத்திற்குக் காலம் பொறுப்பேற்கும் நிர்வாக சபையினர் கல்லூரி வளர்ச்சிக்கு மிகுந்த பற்றுறுதியுடன் செயற்படுவது கண்டு நிறைவடைகின்றேன்.
நான் அதிபராகப் பணி செய்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்கு எனது தனிப்பட்ட நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றேன்.
“எங்கள் கலைமாதா இன்பக் கலைச்செல்வி என்றென்றும் வாழியவே.”