எமது தாய் திருநாட்டின் புகழ் பூத்த கிராமமாம் சுழிபுரம். சுழிபுரத்தை அண்டிய பல கிராமங்களிற்கு கல்வி தாயாக விளங்கும் எமது விக்ரோறியாக் கல்லூரி இன்று கல்வி, விளையாட்டு, பலகலை போன்றவற்றில் முன் சிறந்து விளங்குவது எமக்கு எல்லாம் பெருமை தரும் விடயமாக உள்ளது.
எமது பாடசாலையின் பல பழைய மாணவர்கள், உலகின் பல பாகங்களிலும் தமது தடம் பதித்து, நல்ல துறைகளிலும் மிளிருகின்றனர். அப்படியாகவே விக்ரோறியாவின் பல பழைய மாணவர்கள் கனடா நாட்டிலும் 1995 ஆம் ஆண்டு ஒரு பழைய மாணவர் சங்க கிளையை ஆரம்பித்து, சிறப்பாக இயங்கி வருகின்றனர். அக்கிளையில் 25 வருடமாக நானும் ஒரு அங்கத்தவராக இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகின்றேன்.
பழைய மாணவர் சங்க கனடா கிளை ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா, கோடை கால ஒன்றுகூடல், சுற்றுலாக்கள் என பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் பல வழிகளிலும் நிதி சேகரிப்புகளில் ஈடுபட்டு பாடசாலைக்கு வேண்டிய தேவைகளையும் செய்கின்றது.
எனது பொருளாளர் பதவிக் காலத்தில் 30 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ஒரு ஒன்றுகூடலை ஒழுங்கு செய்து எமது பழைய மாணவர்கள் அனைவரையும் மகிழ்வித்து, மீண்டும் ஒன்றிணைத்து வைப்பதில் கனடா கிளை பெருமிதம் அடைகின்றது.
பழைய மாணவர் சங்கம் என்றால் பாடசாலைக்கு மட்டும் உதவி செய்வது என்ற நோக்கம் மட்டுமல்லாது, இயந்திரமாக ஓடிக்கொண்டு இருக்கும் எம் பழைய மாணவர்களிற்கு இன்ப விருந்தாக இந்நாள் அமையும் என்று எண்ணுகிறேன்.
இச்சந்தர்ப்பத்தில் தம்மால் முடிந்த பண, சரீர உதவி செய்த அனைத்து பழைய மாணவர்களிற்கும், நலன் விரும்பிகளிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க விக்ரோறியா! வாழ்க கனடா பழைய மாணவர் சங்கம்!